போரூர், மே 28-கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள 6 ஆவது பிளாக்கில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவரது மனைவி அருணா (44). கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், திங்களன்று(மே27) காலை அவர் பணிக்கு செல்வதற் காக உடை மாற்ற அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் ஜெயச்சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது அருணா மின் விசிறியில் தூக்கில் தொங்கியநிலையில் உயிருக்கு போராடினார். உடனடியாக அருணாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று அதிகாலை அருணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், அருணாவின் அண்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து இறந்து விட்டார். தாயார் சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அருணா கடந்த சில மாதங்களாக மனஅழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதனால் தான்அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.