tamilnadu

img

‘தகைசால் தமிழர்’ விருது... இல்லத்திற்குச் சென்று சங்கரய்யாவிடம் நேரில் வழங்குகிறார் முதல்வர்....

சென்னை:
சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசுஅறிவித்துள்ள “தகைசால் தமிழர்” விருதை அவரது இல்லத்திற்குச் சென்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் “தகைசால் தமிழர்” விருது விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவுக்கு அறிவிக்கப்பட்டது.இந்த விருதை அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று (ஜூலை29) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.இந்த சந்திப்புக்கு பிறகு கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா தாக்கம் உச்சக் கட்டத்திலிருந்த நேரத்தில் முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பணிகள் பாராட்டத்தக்கதாக உள்ளது.

கடுமையான போராட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவல் கொடுமை யை கட்டுப்படுத்தினார். இதுபோன்று பல்வேறு  நடவடிக்கைகளையும் எடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முதலாக அறிவித்த தகைசால் தமிழர் விருதுக்கு தகுதியானவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர், விடுதலைப்போராட்ட வீரர், எட்டு ஆண்டுகள் சிறைவாழ்க்கையை அனுபவித்து நாட்டு மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவரை, நூற்றாண்டை கொண்டாடி வரும் தோழர் என். சங்கரய்யாவை மாநில அரசு தேர்வு செய்திருக்கிறது. அந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும்  தெரிவிக்க முதலமைச்சர் ஸ்டாலினை நேரிடையாக சந்தித்தோம். அப்போது,  இந்த விரு
தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், இந்த விருதின் ஒருபகுதியாக வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவித்ததையும் முதலமைச்சரிடம் கூறினோம். இதன் மூலம் சங்கரய்யா மீண்டும் மக்களுக்காக பணியாற்றுகின்ற கம்யூனிச லட்சியத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

தோழர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை அளித்திருப்பதன் மூலம் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இளைய தலைமுறை சங்கரய்யாவைப் போல ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும், மக்கள் நலனில் அக்கறை கொண்டும் செயல்பட வேண்டும்என்கிற சிந்தனையை தூண்டுவதாக அந்த விருது அமைந்திருக்கிறது எனவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.சங்கரய்யாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவர் விழாவுக்கு வரவேண்டிய அவசியமில்லை. அந்த விருதை அவரது இல்லத்துக்கு வந்து நானே நேரில் வழங்குகிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.