நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கிய மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்று ஒன்றிய அரசு வெளியிட்ட 2023-24 ஆண்டிற்கான தொழிற்சாலைகள் தொடர்பான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, நாட்டின் மொத்த உற்பத்தித் துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 15 சதவீதம் பங்கினை தமிழ்நாடு வழங்கியுள்ளது. இதன் மூலம் பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவற்றை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. குஜராத், கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், 2023-24ம் ஆண்டில் நாட்டின் தொழில்துறையில் வேலைவாய்ப்பு 5.92 சதவீதம் அதிகரித்து 1.95 கோடி பேராக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 57 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதேசமயம் தொழில்துறையின் மொத்த மதிப்பு (Gross Value Added) 11.89 சதவீதம் உயர்ந்து ரூ.24.58 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது.
அடிப்படை உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், இரசாயனங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற துறைகள் தொழில்துறையில் அதிக பங்கு வகித்துள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.