tamilnadu

img

நேரடி கொள்முதல் கோரி வழக்கு.... அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம்.... உயர்நீதிமன்றம்

சென்னை:
ஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்..

இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மீண்டும் இந்த வழக்கு மே 8 அன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக ஏன் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மே 12 ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.