tamilnadu

img

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடியானது- சிபிஎம்

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடியான என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சொத்தையான காரணங்ளை கூறி உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிப்போட்டு வந்த அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தலையீட்டின் காரணமாக வேறு வழியின்றி தற்போது தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவ்வறிவிப்பில் உள்ள குளறுபடிகள், குழப்பங்கள் காரணமாக நீதிமன்றத் தலையீட்டின் மூலம் தேர்தலை மீண்டும் தள்ளிப்போட வாய்ப்பு கிடைக்காதா என்ற உள்நோக்கத்தோடு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாகும். இந்திய நாட்டில் பல கட்டங்களாக நாடாளுமன்றத்தேர்தல் நடத்தப்பட்டாலும், கடைசி கட்டத்தேர்தல் முடிந்த பின்னரே மொத்தமாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். காரணம் ஒரு கட்டத் தேர்தல் முடிவுகள் அடுத்த கட்ட தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது என்பதால்தான். இந்த நடைமுறைக்கு மாறாக ஊராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு தனித்தனியான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டத்தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் விதிமுறை அமலின் காரணமாக மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். ஏற்கனவே வார்டு வரைமுறை மேற்கொண்டதில் ஏராளமான முறைகேடுகள் குறித்த புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும்
தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் சரி செய்யப்படவில்லை. இதனால் வாக்குப்பதிவின் போது தமிழகம் முழுவதும் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைப்பயன்படுத்தி அதிமுக பல முறைகேடுகளை மேற்கொள்ளவும், தேர்தல் முடிவுகளை தானடித்த மூப்பாக வெளியிடவும் வாய்ப்புகள் உள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரேமாவட்ட ஊராட்சிக்கு தேர்தல் நடைபெறும் என்பது தேர்தலுக்குப் பின்னரும் பல நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்தும். பிரிக்கப்பட்ட மாவட்டங்களில்  தனித்தனியான மாவட்ட ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி, நகராட்சி, சட்ட விதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தேர்தல் கால அட்டவணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட குழப்பங்கள் மற்றும் குளறுபடிகளோடு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானது மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்
காட்டுவதோடு, இவ்வறிப்பினை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஏற்கனவே எழுப்பபட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.