சென்னை:
மதப் பதற்றத்தை உருவாக்குபவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகம் கொரோனா எனும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்து வருகிறது. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அதை எதிர்கொள்ள வேண்டிய வேளையில் மதங்களின் பெயரால் அவர்கள் மத்தியில் பகைமைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் கூடாது. அவற்றை யார் செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்து கிறது.சமீபத்தில் கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனலைச் சார்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. ஆனால் அந்த சேனலின் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி காவல்துறை விசாரிக்க வேண்டும். அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கட்டும், உண்மை இல்லையெனில் இப்படிப் பொய்க் குற்றச்சாட்டைச் சொல்லி மதப்பதற்ற த்தை ஏற்படுத்த முயன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துரையில் கவனம் தேவை
கருப்பர் கூட்டம் சேனல் முருகபக்தர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசம் பற்றி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது, அதற்காக அந்த சேனலே வருத்தம் தெரிவிக்கும் நிலை உருவானது. எனவே மதநூல்கள் பற்றிய கருத்துரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்கிற பாடம் இதில் உள்ளது.
சங்கிகளின் அருவருக்கத்தக்க பதிவு
ஆனால் அதற்குப் போட்டியாக இஸ்லாம் மதத்தின் நபிகள் நாயகத்தை அவதூறு செய்வோம் என மிரட்டுவது நியாயமே அல்ல என்பது மட்டுமல் லாது, அதன் நோக்கம் இதைச் சாக்கிட்டுமதப் பகைமையைத் தூண்டுவதாகும். சங்கிகளில் ஒருவர் மிகவும் அவதூறான சித்திரம் வரைந்து தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள் ளார். மற்றொருவர் தன்னை சிவனடி யார் என்று சொல்லிக்கொண்டு அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத் தளங்களில் நஞ்சைக் கக்கியுள்ளார்.தாமரை டி.வி.யில் சங் பரிவாரத்தைச் சார்ந்த ஒருவர் வன்முறையைத் தூண்டும் வகையிலும், இஸ்லாமியர் நெஞ்சங்களைப் புண்படுத்தும் வகையிலும் பேசியிருக்கிறார். இந்த கொரோனா காலத்தில் முஸ்லிம்கள் மதங்களைக் கடந்து ஆற்றிய சேவைகள் தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை வளர்த்துள்ளது. அதைச் சிதைக்கும் நோக்கில் செயல்படும் இத்தகையோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத நூல்கள் தொடர்பாக அவற்றின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை மக்கள் மத்தியில் பதற்றத்தையும், காழ்ப்புணர்ச்சி யையும் உருவாக்கும் வகையில் வெளிப்படுத்துவதை ஏற்க இயலாது. அது நமது அரசியல் சாசனம் கூறியுள்ள அறிவியல்பூர்வ மனப்பான்மையை வளர்க்க உதவாது, மாறாக சாதாரண பக்தர்களையும் வகுப்புவாதிகளின் பக்கம் தள்ளிவிடும் ஆபத்தைக் கொண்டது.
மத மோதல்களை உருவாக்க வாய்ப்புக் கிடைக்காதா என்று வகுப்புவாதிகள் அலைந்து கொண்டிருக்கிற காலம் இது. இதை உணராமல் பக்தி நூல்களை, மதத் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை, விமர்சிப்போம் என மிரட்டுகிறவர்களை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் நிராகரிக்க வேண்டும், மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.