tamilnadu

img

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் பரிசோதனை.. மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உத்தரவு

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பகத்தில், உள்ள மனநோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர் கள் என அனைவருக்கும்  கொரோனா தொற்று உள்ளதா எனபி.சி.ஆர். பரிசோதனை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கத் தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட மனு விபரம் வருமாறு:கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் முதலில் சமையல் காரரிடம் தொடங்கிய கொரோனா தொற்று, 2 வார்டன்கள், 3 முதுநிலை மருத்துவ மாணவர்கள், மையத்தின் இயக்குனர் என பலரை பாதித்தது. சிகிச்சையில் உள்ள 800 பேரில் 31 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு இருமல் அல்லது தும்மல் வரும்போது, சாதாரண மனிதர்களைபோல,  கைகளை முறையாக சுத்தம் செய்யவோ, மூக்கு, வாய் ஆகியவற்றை உடனடியாக மூடவோ சாத்தியம் இல்லை. மற்றவர்களிடமிருந்து இவர்களுக்கும், இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளது.எனவே மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை நடத்த வேண்டுமென ஜூலை 8 ஆம் தேதி அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யும்படி ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.மனநல காப்பகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதை அரசு அதிகாரிகள் உணராமல் இருப்பதால், அங்கு சிகிச்சையில் உள்ளவர் கள், அவர்களின் துணையாளர்கள், மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை அல்லது கிங் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டுமெனவும், அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலேயே தனி வார்டில் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பாக வியாழன் அன்று (ஜூலை-16) விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சி. கார்ல் மார்க்ஸ் ஆஜராகினார். கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கான சிறப்பு கவனிப்பு அவசியம் என்பதையும், வழக்கமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்தான் நன்றாக கவனிக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.மனுதாரர் தரப்பு விளக்கத்தை மறுப்பதற்கில்லை என தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் மதிக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், அங்கு சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.ஒரு வாரத்தில் இந்த பரிசோதனைகளை முடிக்க வேண்டுமெனவும், அதில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

வரவேற்பு
உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் வரவேற்கின்றோம். இவ்வழக் கில் திறம்பட செயலாற்றிய வழக்கறிஞர் கே.சி. காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.