சென்னை:
தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என முகமது பசிம் என்ற மாணவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிருக்கிறார்.கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் ஒன்றாம் தேதிமுதல் நடைபெறும் எனப்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாகச் சராசரியாக ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால்,இந்த நேரத்தில் பொதுத்தேர்வை நடத்துவது சரியல்ல என எதிர்க் கட்சிகளும், கல்வியாளர்களும் கோரிக்கைவைத்திருக்கின்றனர்.இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி முகமது பசிம் என்ற மாணவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவசர அவசரமாகத் தேர்வுகளை நடத்துவது என்பது என்னைப் போன்ற மாணவர்களுக்கு அச்சமாக உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மாணவர்கள், ஊரடங்குக்கு முன்பாகவே ஊர்களுக்குச் சென்றவர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். மே 31ஆம் தேதிவரை ரயில் சேவையும் இல்லாததால் மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.இதைக் கருத்தில்கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி நடக்கும் 10ஆம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளிவைக்க தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.