tamilnadu

img

சென்னையில் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்  

சென்னையில் உதவித்தொகையை உயர்த்தக்கோரி தமிழக அரசின் தடைகளை மீறி செவ்வாயன்று (மார்ச் 22) மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.  

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். முதுகுத் தண்டுவடம், தசைச்சிதைவு உள்ளிட்ட கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு விதிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்தது.  

இதனையடுத்து, மாவட்டங்களில் இருந்து திங்களன்று (மார்ச் 21) சென்னை நோக்கி புறப்பட்டவர்களை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கோயம்பேட்டில் கைது  

இதனையும் மீறி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சுமார் 2 ஆயிரம் பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் பேருந்து நிலையத்திலேயே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் வந்த சுமார் 300 பேரை கைது செய்த போலீசார் மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். எழிலகம் அருகே கூடியவர்களை பலபிரயோகம் செய்து கைது செய்தனர்.  

அடக்குமுறை மீறி திரண்டவர்கள்  

இந்த கடும் அடக்குமுறைகள் அனைத்தையும் மீறி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சுமார் 700 பேர் குவிந்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில், தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். சென்னை பல்கலைக் கழகம் அருகே முள் கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகளை வைத்து ஊர்வலத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை  

இந்நிலையில் கோரிக்கைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சிராணி, “சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். நியாயமான கோரிக்கைகளை அரசு  படிப்படியாக நிறைவேற்றும். இதர பல கோரிக்கைகள் குறித்து, அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பேச்சு நடத்தி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் தெரிவித்துள்ளதால் அதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிடுகிறோம்” என்றார்.  

இதில், சமூக நலத்துறை செயலாளர் சாம்பு கல்லோலிகர், மாற்றுத்திறனாளிகள் துறைச் செயலாளர் லால்வேனா,  ஆணையர் ஜானிதாம் வர்கீஸ், சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.