சென்னை:
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கொடூரமான தாக்குதலை அரசு எந்திரத்தின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தொடுத்து வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலாஆகியோர் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:இந்தியா முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஆதரவான செய்திகளையே வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து நிர்ப் பந்திக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊடகங்களின், ஊடகவியலாளர்களின் கழுத்தை நெரிக்கும் இழிவான வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகிறது. ஊடக விவாதங்களின் தலைப்புகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும், எந்த தலைப்பாக இருந்தாலும் அதில் பாஜக தலைவர்கள் மட்டுமின்றி பொருளாதார வல்லுநர், மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வலதுசாரி என ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவாளர் களைப் பங்கெடுக்க வைக்க நிர்ப்பந்திக்கிறார்கள். மக்கள் பிரச் சனைகளைப் பேசும் ஊடகவியலாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட முறையில் அவதூறுப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். தொலைப் பேசியில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். ஊடக நிறுவனங்களை மிரட்டி பணியிலிருந்து வெளியேற்றுவதற்கு நிர்ப்பந்திக்கிறார்கள்.
2014ம் ஆண்டு சன் தொலைக் காட்சியில் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியை நடத்தி வந்த வீரபாண்டியன் இதுபோன்ற நெருக்குதலால் சன் குழுமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் குணசேகரன் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை ஆசிரியர் இளைய பாரதி, நிருபர் ஆசிப் முகமது ஆகியோர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது, தமிழக ஊடகச் சூழலில் மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும். தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் கருத்துகளை மட்டுமே தமிழக ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.ஊடகங்களின் குரல் வளையை நெரிக்கும் பாசிச சங்பரிவார் கும்பலின் நடவடிக்கைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மிரட்டல் மற்றும் அவதூறுகளுக்கு அஞ்சாமல் செயல்படும் நேர்மையான ஊடகவியலாளர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், சங்பரிவார் கும்பலின் கீழ்த்தரமான முயற்சிகளைத் தடுத்திட ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், மிகக் கேவலமான முறையில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் புகைப் படங்களை வெளியிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதோடு, சாதி, மத ரீதியாகப் பகைமையை உருவாக்கி சமூகத்தில் குழப்பம் உருவாக்க முயற்சிக்கும் மாரிதாஸ் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.