tamilnadu

img

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுக... ஆகஸ்ட் 5ல் மாநிலம் முழுவதும் போராட்டம்...

சென்னை:
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்ஜூலை 2 அன்று மாநில ஒருங்கிணைப் பாளர் ச.மயில் தலைமையில் காணொலிவழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத் தலைவர் கே.ராஜேந்திரன். அகில இந்தியச் செயலாளர் கே.பி.ஓ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சேது செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் மீது தமிழக அரசுமேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கை கள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (ஆ) நடவடிக்கைகளைத் தமிழகஅரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம்வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்தல்
மற்றும் மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்கலாம்
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 4 மாதகாலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஒன்றரை கோடி மாணவர்களின் கல்வி நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலன்கருதி நோய்த்தொற்றின் தாக்கம் சற்றுத்தணிந்தவுடன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும்வலியுறுத்தப்பட்டது.மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்திஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலகங்கள் முன்பாக 5.8.2020 அன்று தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட் டம்” நடத்திட முடிவுசெய்யப்பட்டது.

தொலைக்காட்சிப் பாடங்கள்
மேலும் கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இடஒதுக்கீட்டை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடுமுழுவதும் 2020-21ஆம் கல்வியாண்டி ற்கான பாடப்புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடவேண்டும் எனவும். தமிழகத்தில்தொலைக்காட்சி வழியே ஒளிபரப்பப்படும் 2 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை அனைத்துப் பகுதிமாணவர்களும் பார்த்துப் பயன்பெறும்வகையில் எளிதில் தெரியும் தொலைக் காட்சி சேனல்களில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கொரோனா நோய்த்தொற்றுதடுப்புப் பணிகளில் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ந்து ஈடுபடுத்தும் போக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங் களான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கம்,தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற னர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் நன்றி கூறினார்.