சென்னை:
பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள் ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கச் செயலாளர் வித்யாசாகர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் 24 மணி நேரமும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் 22 விழுக்காடு மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், தூக்கமின்மை, ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதேபோல குழந்தைகளின் நடத்தை, உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக 87 விழுக்காடு பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளதாகவும், இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையில், கல்விச்சுமையும் மாணவர்களின் மனநலத்தை பாதிக்கச் செய்வதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே, மாணவர்களின் நலன் கருதி, 50 விழுக்காடு மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண் டுள்ளார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசுதான் என்றும், பள்ளிகளை திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கை அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, பள்ளிகள் திறப்பு தொடர் பாக, எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண் டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்கா விட்டால், மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.