சென்னை:
மாநில உரிமையைப் பறிக்கும் தாய்மொழிக் கல்வியை ஒழிக்கும் மத்திய அரசின் கல்வி கொள்கை தொடர்பாக அனைவரிடமும் விவாதம் நடத்தி மத்திய அரசுக்கு பதில் அறிக்கை அனுப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
2017 ஜூன் 26ல் மத்திய மனிதவளமேம்பாட்டு துறை புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கையை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நீ சாங் 31/05/2019 அன்று வெளியிட்டு ஜூன் 30க்குள் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசத்தை வெளியிட்டுள்ளார்.
2014 இல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு புதிய கல்விக் கொள்கைக் கான வரைவு அறிக்கையை உருவாக்க டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 2016 இல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கை உயர்கல்வியில் பாடத்திட்டங்களை கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்தி விட்டு, சந்தைக்கு ஏற்ப கல்வி முறைஎன்ற வகையில் தனியாரிடம் ஒப்படைப்பது, நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து இருத்தல் , நன்கொடை, கட்டணம் போன்ற விவரங்களில் அரசு, நீதிமன்றம் தலையிடாமல் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வருவதோடு கல்வித் துறைக்கு தனி ஒழுங்கு முறை ஆணையம் அமைப்பதோடு, பல்கலைக்கழக மானிய குழுவை கலைப்பது, நிதி ஆயோக் உருவாக்குவது, திறன் வளர்ச்சியை மையமாக வைத்து அரசு - தனியார் பங்களிப்பு அவசியம் என மோசமான பரிந்துரைகளை டி.எஸ்.ஆர்
சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்தது. இதற்கு நாடு முழுவதும் வலுவாக எதிர்ப்பு கிளம்பியதால் உடனே பரிந்துரையை அமல்படுத்தாமல், மத்திய அரசு கஸ்தூரிரங்கன் கமிட்டியை உருவாக்கியது.
இக்குழு தற்போது 484 பக்கம் கொண்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்கவும் ,அதற்காக மும்மொழிக் கொள்கையை சட்டமாக்கி, ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம். தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது இந்திகட்டாயம் இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் யோகா கட்டாய பாடமாகவும், ராஷ்ட்ரிய சிக்ஷா, அல்லது தேசிய கல்வி ஆணையம் அமைப்பது என்றும் ஏற்கனவே எதிர்க்கப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் பரிந்துரைகளை முழுமையாக ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கல்வித்துறையில் அறிவியல் பூர்வமான கல்வியை கொடுக்காமல், கால அவகாசமின்றி, மாநிலமொழிகளில் வெளியிடாமல், இந்தியைத் திணித்து, மாநில உரிமையை பறித்து, தாய்மொழி கல்வியை ஒழித்து, தனியார் கார்ப்பரேட்களிடம் கல்வியை தாரைவார்ப்பதை ஒரு போதும் மாணவர்கள் ஏற்க மாட்டோம். தமிழக அரசு அனைவரிடமும் விவாதம் நடத்திமத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும். அதன் அடிப்படையிலேயே கஸ்தூரி ரங்கன் அறிக்கை மீது தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.