tamilnadu

img

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வி துறை

சென்னை, ஏப்.10-மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன.கோடையில் வெயிலின் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவு களை மேம் படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும்.எனவே, மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.