சென்னை
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி ஹாக்கி மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சடலத்தை மீட்டு துரித விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் இறந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது தந்தை ரகு இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் கேரளா மாநிலத்தில் பிடெக் முடித்துவிட்டு சென்னை வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
“மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதம் அவரது அறையில் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது உன்னி கிருஷ்ணனுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.