tamilnadu

img

பாமக அவதூறு பிரச்சாரம்: திருமா கண்டனம்

உளுந்தூர்பேட்டை, ஏப்.8-விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “தங்கள் சுய நலனுக்காக அதிமுகவை மதவெறி சனாதன சக்திகளிடம் அடகு வைத்துள்ள இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நாட்டையும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைத்துப் பகுதி மக்களையும் பாதுகாக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.பாட்டாளி மக்கள் கட்சியில் தனது மகனுக்கு போட்டியாக வளர்ந்து கட்சியை கைப்பற்றி விடுவார் என வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்களை வெளியேற்றியவர்கள் அதன் நிறுவனரும் மகனும். வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலுவான அமைப்பாக வளர்ந்து வருவதை கண்டு அதனை ஒடுக்க வேண்டும் என்று நம்மைப்பற்றி பொதுமக்களிடையே அவதூறு பிரச்சாரத்தை செய்து வருவதாக திருமாவளவன் குற்றம் சுமத்தினார்.


இப்பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் ரவிக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் தலைவர் வேல்முருகன், விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.முன்னதாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், காங்கிரஸ் ஆர். டி. வி.சீனுவாசகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏவி.சரவணன், மதிமுக பாபுகோவிந்தராஜன், மனித நேய மக்கள் கட்சி முஸ்தாகிதின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்பாஸ், விடுதலை சிறுத்தை கட்சி ஆற்றலரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரன் உட்பட கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.