சென்னை:
தையல் தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு தனி நிதியத்தை உருவாக்க வேண்டுமென்று தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
அனைத்து தொழிற்சங்கங் களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு திறன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நடத்தினார். அதில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த மனுவை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஹைடா ஹெலன் அமைச்சரிடம் அளித்து பேசினார். அப்போது, தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனி நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு தொழில் செய்ய மானியத்துடன், வட்டியில்லாத வங்கி கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தையல் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமல் படுத்தவும், தையல் கூட்டுறவு தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தை சென்னையில் கூடுதலாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்நிகழ்வின் போது தையல் சம்மேளன தலைவர் பி.சுந்தரம், நிர்வாகிகள் பி.கோவிந்தசாமி, எஸ்.டி. ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் எம்.ஆனந்தன், ஜி.குணசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.