திருப்பூர், ஏப். 2-
பல்லடத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றிக்குப் பாடுபட தேர்தல் பணிமனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. திறந்து வைத்தார்.பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் தேர்தல் பணிமனைத் திறப்புவிழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மத்தியக்குழுஉறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ரிப்பன் வெட்டி தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், நம் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள் இதை இஸ்லாமிய நாடாக அறிவிக்கவில்லை. அசோகர் ஆண்டபோதும் புத்த நாடாக அறிவிக்கவில்லை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நடத்தியபோதும் இதை கிறிஸ்துவ நாடாகஅறிவிக்கவில்லை. நம் நாட்டு அரசியல் சட்டம் மதச்சார்பற்றது. அதாவது அரசுக்கு மதம் கிடையாது என்பதே இதன் பொருள். ஆனால் பாஜக அரசு நம் நாட்டை இந்து நாடு என்று மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. இக்கட்சி மற்ற அரசியல் கட்சிகள் போன்றதல்ல. ஆர்எஸ்எஸ் பாசிச அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதாகட்சி. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, மேல் சாதிஆதிக்க அடிப்படையிலான ஒற்றைச் சிந்தனை என இந்தியாவை மாற்றமுயல்கின்றனர். இதைத் தெரிந்தே ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர்.தெரியாமல் பலர் ஆதரிக்கின்றனர்.எனவே இந்த தேர்தலில் நம் நாட்டைப் பாதுகாக்க பாரதிய ஜனதாவையும், அதனோடு சேர்ந்து நிற்கக்கூடிய, தமிழகத்தில் வெற்றுஆட்சி நடத்திவரும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.இந்த தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்வில், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் நா.சோமசுந்தரம், பல்லடம் நகரப் பொறுப்பாளர் ந.ராஜேந்திரகுமார், காங்கிரஸ்வட்டாரத் தலைவர் எம்.புண்ணியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் எஸ்.சாகுல் அமீது, மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் க.முத்துரத்தினம், கொமதேக மாவட்டச் செயலாளர் கரைப்புதூர் சி.ராஜேந்திரன், விசிக மாவட்டச் செயலாளர் நா.தமிழ்முத்து, முஸ்லீம் லீக் நிர்வாகிரஃபீ உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ்,எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளானோர் பங்கேற்றனர். முடிவில் மார்க்சிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் நன்றி கூறினார்.