தக்கலை:
பள்ளிக்கல்வி-மருத்துவ, தொழிற்கல்வி படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அ.அமலராஜன், பொதுச்செயலாளர் த.கனகராஜ், மாநிலப் பொருளாளர் பீ.அப்துல் ரஜாக் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு:
தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முதன்மைபெற அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவிபெறும் பள்ளிகளும் சமபங்காற்றி வந்துள்ளன.அரசு பள்ளிகள் செயல்பட இயலாத குக்கிராமங்களில் கூட சேவை எண்ணம் கொண்ட பலர் கல்வி நிறுவனங்களை நிறுவி அரசின் நிதி உதவியுடன் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு கல்விப்பணி ஆற்றி வருவது எவரும் மறுக்க இயலாத ஒன்று.கடந்த அதிமுக ஆட்சி பாரம்பரியம் மிக்க சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி அவற்றின் சீரிய செயல்பாடுகளை முடக்கிட பெரும் முயற்சி மேற்கொண்டது.குறிப்பாக 7.5 சதவீத மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய பங்களிப்பை வழங்கிடக் கேட்டபோது அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளே என்று அன்றைய முதல்வர் ஏளனம் செய்து பேசியதையும் கல்வி ஆர்வலர்கள் எவரும் மறந்து விடவில்லை.
தங்கள் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு,உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீதி வழங்கும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து செய்துள்ள அறிவிப்பினை தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வரவேற்கிறது.தமிழக அரசு வழங்குகின்ற மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய பங்களிப்பை அளித்திட வேண்டுமென எமது அமைப்பு வலியுறுத்துகிறது. ஏழை,எளிய அடித்தட்டு மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களின் கருத்தும் இதுவே.எனவே தங்களது ஆட்சியில் வழங்கப்படுகின்ற அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சமநீதி வழங்கி, கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.