tamilnadu

img

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் வெட்டு...   தமிழக அரசு மிரட்டல்....

சென்னை:
அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர்கே.சண்முகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அகில இந்திய அளவில் 26 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக சில மத்திய தொழிற் சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் அவைகள் ஈடுபட உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் சில உத்தரவுகளை பிறப்பிக்க விழைகிறேன்.
அதன்படி, அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டமோ அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவதோ, வேலை நிறுத்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வேறு ஏதாவது வகையில் எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்களின் வழக்கமான இயக்கத்தை தடுக்கும் விதத்தில் செயல்பட்டாலோ அது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகள் 20, 22, 22 ஏ ஆகிய பிரிவுகளை மீறியதாக கருதப்படும்.எனவே உங்கள் துறைகளின் கீழ் வரும் அரசு ஊழியர்கள் யாரும் இந்த ஒழுங்கு முறை விதிகளை மீறக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாக உத்தேசிக்கப் பட்டுள்ள 26 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் அது அங்கீகரிக்கப்படாத ‘ஆப்செண்ட்’ ஆக கருதப்படும்.

மேலும் பணி செய்யவில்லை, சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு அந்த நாளுக்கான சம்பளமும், சலுகையும் அளிக்கப் படாது.பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர், தொகுப்பூதியம் பெறுவோர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள். 26 ஆம் தேதி அன்று மருத்துவ விடுப்பு தவிர, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பை எடுத்தாலும் அது அனுமதிக்கப் படாது. எனவே இதன் அடிப்படையில் 26 ஆம் தேதி அன்று அனைத்து துறை தலைவர்களும் தங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அன்றைய தினம் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள விவரங்களை தங்கள் துறை செயலாளர்களுக்கு 26 ஆம் தேதி காலை 10.15 மணிக்குள் அறிக்கையாக அனுப்பி விட வேண்டும். அந்த அறிக்கைகளை பெறும் அதிகாரிகள் அந்த அறிக்கைகளை தொகுத்து அன்று காலை 10.30 மணிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.