ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குதல் மற்றும் திட்ட நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையின் விளைவாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பிற்காகவும், இந்தியாவின் ஊரக பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கான முயற்சிகளில் ஒன்றாகவும் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது தற்போது படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை பலவீனப்படுத்துகிற ஒன்றிய அரசாங்கத்தின் அணுகுமுறையென்பது கிராமப்புற ஏழை உழைப்பாளின் மீது நேரடியாக தொடுக்கப்படுகிற ஒரு பொருளாதார யுத்தமே ஆகும் என்பதோடு, கிராமப்புற வறுமை ஒழிப்பு எனும் இலக்கையும் முற்றிலுமாக நீர்த்துப் போக செய்துவிடும். மேலும் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களை மேலும், மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதாகவும் கூட இது அமைந்து விடும் என்பதால் ஒன்றிய அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பின்வரும் அம்சங்களை பரிசீலித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இத்திட்டம் என்பது இந்திய கிராமப்புறங்களில் உள்ள ஏழை உழைப்பாளிகளுக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தது நூறு நாட்களாவது வேலை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆனால் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இத்திட்டத்திற்கான நித் ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்படுவதோடு, குறைந்த பட்ச வேலைநாட்களும் கூட கிடைக்காமலும், கூலியின் அளவும் வெகுவாக குறைக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 2020 - 21 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.1,11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் சுமார் 11 கோடி கிராமப்புற ஏழைகளுக்கு ஓரளவிற்கு பலன் கிடைத்தது. ஆனால் தற்போது இத்திட்டத்திற்கான நிதி 2021 - 22 நிதியாண்டில் 40 சதவீதம் அளவிற்கு அதாவது ரூ.78,000 கோடியாக குறைக்கப்பட்டு விட்டதால் பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளர்களுக்கு பணி கிடைக்காமல் போய்விட்டது.
மேலும், இந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தற்போது முழுவதுமாக தீர்ந்து விட்டதால் மேலும் ஆறு மாதங்களுக்கு நாடு முழுவதிலும் இத்திட்டம் முற்றிலுமாக முடங்கு நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கான ஊதியமும் வழங்கப்படாமல் மிகக்கணிசமாக நிலுவையில் உள்ளது. குறிப்பாக 22 மாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கான ஊதிய நிலுவை என்பது சுமார் 8 ஆயிரம் கோடியாக உள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு மட்டும் ரூ.2,137 கோடி நிலுவை உள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாக குறைத்துவிட்ட நிலையில் பெருமளவில் நிலுவையில் உள்ள மாநிலங்களுக்கான நிதியை வழங்க முன்வருமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
இத்திட்டத்தின் அமலாக்கம் மற்றும் தேவை குறித்த எவ்வித ஆய்வையோ, முன்னேற்பாடுகளையோ மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு தானாகவே தன்னிச்சையாக நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களில் 13 சதவீதம் குடும்பங்களுக்கு வேலை அளிக்க முடியாமல் போனதோடு, தற்போது வழங்கப்பட்டு வரும் நாட்கூலியான ரூ. 209/- ஐயும் கூட பல மாநிலங்களில் முழுமையாக வழங்க முடியாத நிலையும் கூட உருவாகியுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பத்தவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பட்டியலின, பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களே என்பதால் இது சமூக ரீதியிலும் ஒரு பெரும் தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது.
தற்போதையை கோவிட் நெருக்கடி காலத்தில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பெரும்பாலான ஏழை உழைப்பாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் நெருக்கடி காரணமான தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 17,000 பேர் ஏழை உழைப்பாளிகள் ஆவர். மேலும் இக்காலத்தில் கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதமும் கூட இந்தியாவில் அதிகரித்துள்ளதாக பல்வேறு அரசுத்தரப்பு தரவுகளும் கூட தெரிவிக்கின்றன.
எனவே, மேற்கண்ட அம்சங்களை கணக்கில் கொண்டு, இந்திய ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்தம் வகையிலும், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை உழைப்பாளர்கள் பலன் பெறுவதற்கான முறையிலும் தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் இத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கிட ஏதுவாக மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டையும் எவ்வித நிலுவையின்றி வழங்க முன்வருவதோடு, கிராமப்புற வறுமை ஒழிப்பு என்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை மேலும், மேலும் வலுப்படுத்துவதற்கான முறையில் அனைத்து விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க முன்வர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.