tamilnadu

ரூ.100 கோடியில் பெருங்குழுமங்கள்: அமைச்சர் தகவல்....

சென்னை:
வளர்ந்து வரும் தொழில் துறைகளான மருந்து, பெட்ரோ ராசயனங்கள், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, நவீன போக்குவரத்து ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிட்கோ மூலம் ஐந்து பெருங்குழுங்களுக்கான பொது வசதி மையங்கள் ரூபாய் 100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்துபேசிய அமைச்சர் அன்பரசன் ,“புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்பிய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவும் வகையில் நீட்ஸ்- புலம் பெயர்ந்தோருக்கான சிறப்பு முன்னெடுப்புகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த துணைத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டு வரைக்கும் செயல்படுத்தப்படும் என்று அவர்  கூறினார்.

வேளாண் பெருந்திட்டம்
திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான பகுதிகளை “வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக” அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வேளாண் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் உருவாகுவதற்கு ஏதுவாக, ஏற்கெனவே இயங்கி வரும் தொழிற்பேட்டைகள் மேம்படுத்தப்படும். புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி போக்குவரத்து வசதிகள் வலுப்படுத்தப்படும். மேலும், சந்தைகள் மற்றும் துறைமுகங்களை இணைத்தும் அடிப்படை மின்சார வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார்செய்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.