கடலூர், மே 10-கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 5 தீயணைப்பு நிலையங்களுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசர காலங்களில் உதவிடும் வகையில் தமிழக அரசால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 15 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு 15 கி.மீ. தூரத்திற்கு ஒரு தீயணைப்பு நிலையம் என்ற கொள்கையை வகுத்துள்ளதால் கடலூர் மாவட்டத்தில் கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 15 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக புவனகிரி, கம்மாபுரம், பெண்ணாடம், மங்களூர், சிறுப்பாக்கம் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையம் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரைத்து கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து முறையான உத்தரவு கிடைத்தால் கூடுதல் தீயணைப்பு நிலையங்கள் கிடைக்கும். இதனால், பாதிக்கப்படும் பகுதிகளுக்கு விரைந்துச் செல்ல முடியும்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 138 தீ விபத்து தொடர்பான அழைப்புகளையும், 80 மீட்பு தொடர்பான அழைப்புகளையும் பெற்றுள்ளோம். அதிகமாக விஷவண்டு தாக்குதல், பாம்பு மீட்பு, பசுமாடு மீட்பு போன்றவற்றிற்காக பொதுமக்கள் அழைக்கிறார்கள். இதேப்போன்று, ஏப்ரல் மாதத்தில் 131 தீ விபத்து அழைப்புகள் வரப்பெற்று தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் பகுதிகள் உள்ளன. இதேப்போன்று, ஏப்ரலில் 90 மீட்பு நடவடிக்கைக்காக அழைப்புகள் வரப்பெற்றதில் விஷவண்டு தாக்குதல் தொடர்பாக 33, பாம்பு மீட்பு 31, பசுமாடு மீட்பு 9 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன என்றார்.தமிழக அரசு அண்மையில் விருத்தாசலம், சிதம்பரம் தீயணைப்பு நிலையங்களுக்கு ரோந்து பணிக்காக இருசக்கர வாகனம் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.