சென்னை:
வல்லுறவு செய்யப்பட்ட மனவளர்ச்சி பாதித்த பெண்ணை குற்றவாளிக்கே 2-வது திருமணம் செய்ய கட்டப்பஞ்சாயத்து நடத்திய ஊத்தங்கரை டி.எஸ்.பி. மற்றும் குற்றவாளியைப் பாதுகாக்க முயலும் மிட்டப்பள்ளி ஊராட்சி தலைவர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறை தலைவரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர்பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்பிராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளியில் மனவளர்ச்சி பாதித்த பெண்.தந்தை இறந்து விட்டார். தாய் மனநலம் பாதித்தவர். தம்பி மனவளர்ச்சி பாதித்தவர். அண்ணன் சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் விட்டார். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த ஸ்ரீபால் (35) என்ற கயவன் மாற்றுத்திறனாளி பெண்ணை பல மாதங்களாக வல்லுறவு செய்து, தற்போது அப்பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இதுகுறித்து புகார் செய்தபோது ஆரம்பம் முதலே காவல்துறை இழுத்தடிப்பு செய்து வந்தது. பிறகு, எமது சங்க முயற்சியில் சிங்காரப் பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் 3.6.2021 அன்று புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகாரை பதிவு செய்ததற்கான ஆவணத்தை 5ஆம் தேதி வரைக்கும் காவல்துறையினர் வழங்கவில்லை.எனவே இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை உயர் அதிகாரிக ளுக்கும் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி. குறுஞ்செய்தி அனுப்பினார்.இத்தகைய பின்னணியில், ஊத்தங்கரை டிஎஸ்பி அலுவலகத்தில் குற்றவாளி ஸ்ரீபால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாய், மிட்டப்பள்ளி ஊராட்சி தலைவர் சின்னத்தாயி கமலநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சின்னத்தம்பி, எக்கூர் செல்வம், ஊர் நாட்டாமை கோவிந்தன், தர்மகர்த்தா பெருமாள், மற்றும் ராஜா ஆகியோரை வைத்து காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே திருமணமாகி மனைவி 3 குழந்தைகளுடன் எட்டிப்பட்டியில் வசிக்கும் குற்றவாளி ஸ்ரீபாலுக்கு, மனவளர்ச்சி பாதித்த பெண்ணை 2-வது திருமணம் செய்ய டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை யினர் வழிகாட்டி முடிவு செய்துள்ளனர்.இதனால், நீதி கேட்டு காவல்துறை தலைவரிடம் சங்கத்தின் சார்பில் புகார் செய்ய சென்றோம். இந்த தகவலை அறிந்து கொண்ட காவல்துறையினர் தற்போது சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால், பாலியல் வல்லுறவு குற்றத்துக்கான தண்டனைச் சட்டப் பிரிவு 376 சேர்க்கவில்லை. குற்றவாளியைப் பாதுகாக்கும் நோக்கம் இதில் அப்பட்டமாக தெரிகிறது. மேலும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் தண்டனை பிரிவு-92 வழக்கில் சேர்க்கவில்லை.
பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்ட விரோதமாக கட்டப் பஞ்சாயத்து செய்து குற்றவாளியைப் பாதுகாக்க முயன்றுள்ள ஊத்தங் கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் உள்ளிட்ட காவல்துறையினர், மிட்டப்பள்ளி ஊராட்சி தலைவர் சின்னத்தாயி கமலநாதன் மீதும் காவல்துறை குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
திருமணத்தை தடுத்திடுக!
பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டவிரோதமாக ஓரிரு நாளில் குற்றவாளிக்கே திருமணம் செய்ய முயற்சிப்பதாக தகவல் வருவதால், அத்திருமணத்தை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பான இல்லத்தில் தங்க வைத்து பாதுகாக்கவும், உரிய நிவாரணம் கிடைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். நடந்த குற்றம் குறித்து தகவல் அளித்த எமது சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மாற்றுத்திறனாளி தங்கபாலு(32)-க்கு ஊர் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறையினர் அச்சுறுத்து வதாக கூறப்படுகிறது. அவருக்கும் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.