tamilnadu

img

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் ஆர்.என்.ரவி துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு- மாநாட்டை புறக்கணிக்க சிபிஎம் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் துணை வேந்தர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும். திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆர்.என்.ரவியின் இந்த சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்பதுடன், துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டுமெனவும் சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்துகிறோம்.