tamilnadu

img

ஏழை ஓய்வூதியர்களின் வாரிசுகளை தண்டிப்பதா? மத்திய அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்

சென்னை:
ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையை தேர்வு செய்த ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு முதலீட்டைத்திரும்பத் தரும்போது மூல ஓய்வூதியத்தின் 100 மடங்காக கணக்கிடுவதைஉறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலம் மற்றும்வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதம் வருமாறு:

முதலீட்டைத் திரும்பத் தருவதற்கான தொகையைக் கணக்கிடுவதில் ஓய்வூதிய பரிமாற்றத்தைத் தேர்ந்தெடுத்தவர்களின் வாரிசுகளைப் பொறுத்தவரையில் நிலவும் ஒழுங்கின்மை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.1995-ம் ஆண்டின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்13வது பத்தியின்படி தனது முதலீட்டினைத் திரும்பப்பெற ஒருவர் விரும்பினால், அவரது மூல ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள 90 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதில்வாரிசுகளுக்குத் திரும்பத் தரப்படும் முதலீட்டின் அளவுமூல ஓய்வூதியத்தின் 100 மடங்கு ஆக உள்ளது.எனினும் தங்களது ஓய்வூதியத்தில் பரிமாற்றம்செய்வதை தேர்ந்தெடுத்தவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது மூல ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதாவது பரிமாற்றம் செய்வதைத் தேர்ந்தெடுக்காதவர்களுக்கு பிடித்தம் செய்த அதே அளவு பிடித்தம் செய்யப்படுகிறது. எனினும் இவர்களுக்கு முதலீட்டைத் திரும்பத் தரும்போது பரிமாற்றத்திற்குப் பிறகுள்ள ஓய்வூதியத்தின் 100 மடங்குதான் தரப்படுகிறது.

இந்தப் பிரிவினருக்கு மூல ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்ட போதிலும், முதலீட்டைத்திரும்பத் தரும்போது, பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகான ஓய்வூதியத்தின் மீதமுள்ள பகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதே தவிர, மூல ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் அல்ல. எனவே இத்திட்டமானது மேலும் அதிகமான பிடித்தம் செய்யவே வழி வகுக்கிறது; அதே நேரத்தில்ஓய்வூதியத்தில் பரிமாற்றத்தை தேர்வு செய்தவர் களுக்கு குறைந்த தொகையை வழங்குகிறது. இத்தகைய பாகுபாடான நடவடிக்கைக்கு எவ்விதமான நியாயமும் இல்லை.தனது ஓய்வூதியத்தில் பரிமாற்றத்தை தேர்வு செய்தவர் ஏற்கனவே துன்பத்தில் தான் இருக்கிறார். ஏனெனில் ஓய்வூதியத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையானது 100 மாதங்களில் அவரால் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்ட போதிலும் அவரது மூல ஓய்வூதியம் அவருக்கு உடனடியாக மீண்டும் வழங்கப்படுவதில்லை. இப்போது அவரது வாரிசு முதலீட்டைத் திரும்பப் பெறும்போது அவர் பெற வேண்டிய தொகை குறைக்கப்படுவதன் மூலம் மேலும் அவர் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

எனவே இத்திட்டம் ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்களை ஒப்பிடும்போது பரிமாற்ற முறையை தேர்வு செய்பவர்களுக்கு மிக மோசமான இழப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.இத்தகைய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் ‘1995-ம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்’ 13வது பத்திக்கான விளக்கம் எண் 4-ஐ நீக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இது தொடர்பாக, ஓய்வூதியத்தில் பரிமாற்றத்தை தேர்வு செய்தவர்கள் எத்தகைய இழப்பை சந்திக்கின்ற
னர் என்பது குறித்த தெளிவான சித்திரத்தை வழங்கும்வகையில் ஒரு மாதிரி விளக்க அறிக்கையை இத்துடன்இணைத்துள்ளேன். அதிலிருந்து ரூ. 20,600 லிருந்து ரூ. 28,100 வரையில் இவர்களின் இழப்பு இருப்பதை உங்களால் காண முடியும். ஏழைகளான ஓய்வூதியர்களுக்கு இந்த இழப்பு மிகப்பெரியதாகும். தவறேதும் செய்யாத அவர்களின் வாரிசுகள் இதன் மூலம் தண்டிக்கப்படுகின்றனர்.இதன் மூலம் வாரிசுகளுக்குச் சென்று சேர வேண்டிய, ஏழை ஓய்வூதியர்களுக்குச் சொந்தமான,  நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் அவர்களுக்குத் திரும்பத் தரப்படாத நிலை ஏற்படுகிறது.

இந்த விஷயம் குறித்து பரிசீலித்து, ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையை தேர்வு செய்த ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு முதலீட்டைத் திரும்பத் தரும்போது மூல ஓய்வூதியத்தின் 100 மடங்காக கணக்கிடுவதை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் வறுமையிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.