ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்தகட்டமாக பொதுவேலை நிறுத்தம் நடத்த திமுக முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு:
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை பல்வேறு வகைகளிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி என்பதன் தொடர்ச்சியாக ஒரே நாடு, ஒரே கல்வி என்கிற பெயரில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள்.
மாநிலங்களுடைய ஒன்றியம் தான் இந்தியா என்பதை மறந்துவிட்டு பாஜகவினர் தனி தேசத்தை ஆண்டு கொண்டு இருப்பதைப் போல செயல்படுகிறார்கள். இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுவதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.
ஒரு மொழியையும் விரும்பி கற்றுக் கொள்வதில் தவறில்லை. மொழி திணிப்பை கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்கவில்லை, தமிழகமும் ஏற்கவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை உள்ளது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை மட்டும் தான் நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் ஒப்பிட்ட அளவில் கல்வியில் முதன்மையான இடத்தில் தமிழகம் இருக்கிறது என்பதை ஒன்றிய அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. அத்தகைய தமிழ்நாட்டில் இன்னொரு மொழியை கட்டாயப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. இதை ஒன்றிய அரசுமாற்றிக்கொள்ள வேண்டும்
மாணவர்கள் இத்தனை மொழி கற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கு உரிமையில்லை. சட்டதிலும் அப்படி சொல்லப்படவில்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தமிழ்நாடு நடந்து கொள்கிறது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் சாசனத்தினுடைய எந்த ஒரு அம்சத்தையும் மதிக்காத கூட்டம் இதை சொல்கிறது.
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் ஆர்எஸ்எஸ் திட்டங்களை அடாவடித்தனமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதன் ஒருபகுதியாக புதிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தர மாட்டேன் என்று சொல்வதற்கு அமைச்சருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. தமிழ்நாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இயற்கை பேரழிவுக்கு இதுவரை எந்த நிதியும் தர மறுத்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது பாஜக.
ஒன்றிய அரசு தனது போக்கை போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழகமே திரண்டு நிற்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு முழுமையான பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.