சென்னை;
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டு, தொற்றுப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர், நிதியமைச்சர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:
தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்று இரண்டாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள மருத்துவர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், நீதிபதிகள் ஆகியோருக்கு தமிழக அரசு இறந்த மேற்கண்ட ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள் ளது. அதைத்தொடர்ந்து மருத்துவ முன் களப்பணியாளர்களுக்கு அறிவித்த தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதையும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.தமிழக அரசு, அறிவித்த ஊக்கத்தொகையை வழங்கிடவும், அதைத் தொடர்ந்து முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிட வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ள செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், மருந்தாளுநர்கள், ஊடுகதிர் நுட்பனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத் துறை, உணவுத்துறை, தீயணைப் புத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பிற துறை ஊழியர் களுக்கும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு, நோய் தொற்று ஏற்பட்டுஉயிரிழக்கும் நிலையில் அவர்களுக்கும்,அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக் கும் ரூ.25 லட்சம் நிவாரண தொகையினை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.கொரோனா நோய் தடுப்பு பணியில்ஈடுபட்டு உயிர் இழந்த அரசு ஊழியர்களின் அவர்தம் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என சென்ற ஆண்டு 2020 தமிழக அரசு அறிவித்தது. அது முழுமையாக அமல்படுத் தப்படவில்லை. அதனால் தற்போது நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு இறக்கும் ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும்.
ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு முககவசம், கிருமி நாசினி, ஜின்க் மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், கோவிட்-19 ஆரோக்கிய பெட்டகம் போதுமான அளவில் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கிட வேண்டும்.கொரோனா, கறுப்பு பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வேண்டும். கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் தரமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்(PPE Kit) வழங்கிட வேண்டும்.பொது சுகாதாரத்துறையின் உத்தரவை மீறி கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தியதால் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே கர்ப்பிணிகளாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களையும் கொரோனாசிகிச்சைப் பணியில் ஈடுபடுத்த வேண் டாம். எனவே தமிழக அரசு கொரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் மற்ற துறையிலுள்ள முன் களப்பணியாளர்களுக்கும் பொருந்தும் வகையில் அரசு உத்தரவு வழங்கிட வேண்டும்.கொரோனா தொற்றினை எதிர் கொள்வதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையில் மருத்துவத் துறைக்கு புதிய நியமனமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர் களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே வேளையில் அப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா தொற்றின் தீவிரத்தை கருத்திற்கொண்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக் கான படுக்கை வசதியின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், படுக்கை வசதி உயர்த்தியுள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஊழியர்களின் எண்ணிக்கை பூர்த்தி செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.