சென்னை:
மாணவர்கள் இணைய வழி கல்வியை தொடர 2017-2018 ஆம் ஆண்டில் பயின்ற வர்களுக்கு இலவச மடிக்கணினியை தமிழகஅரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்களும் மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசுகளால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மாணவர்கள் கடந்த பத்து மாதம் கல்வியில் இருந்து பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். ஆனால் எப்போதும் போல தனியார்பள்ளி/கல்லூரிகள் தங்களின் வியா பாரத்தை பெருக்கும் வகையில் கட்டாய வசூலில் ஈடுபடுவதற்காக இணையவழி வகுப்பை தொடங்கின. பின்னர் அரசு பள்ளி, கல்லூரிகளிலும் இணையவழி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இதுவரை சுமார் 37 லட்சத்து 88 ஆயிரத்து 528 மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 2017-2018 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தற்போது வரை இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை .ஆனால் தமிழக அதிமுக அரசு, சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு இலவச டேட்டா என்று மாணவர்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழலில் கல்வி நிலையங்களில் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருவதால் மடிக்கணினிஇல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . எனவே தமிழகம்முழுவதும் 2017-2018 ஆம் ஆண்டு படித்தமாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதுவரை மடிக்கணினிகள் வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு இந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் தொடர்ந்து இணையவழி கல்வியை கற்கும் வகையிலும் அவர்களின் எதிர்கால நலன் கருதி இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.