சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி பேரணி நடத்த இருந்த நிலையில், சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் 09.09.2024 அன்றிலிருந்து வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அவர்களின் முதன்மையான கோரிக்கை தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்க வேண்டும் என்பதுதான். ஆனால், சாம்சங் நிர்வாகம் இந்த கோரிகையை ஏற்க மறுத்த நிலையில், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க கோரிக்கை மீது பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். ஆலைக்குள் நிறுவனத்திற்கு ஆதரவான கமிட்டியில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும், வேலை நிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முனவைத்து காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சாம்சங் தொழிலாளர்களின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்நிலையில் காலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அராஜகமான முறையில் சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, பேரணி செல்ல முயன்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.