சென்னை:
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஜூன் 22 ஆம் தேதி திமுகவின் மூத்த உறுப்பினர் தா.உதயசூரியன் தாக்கல் செய்தார். அதன் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மமக, பாமக, பாஜக உள்ளிட்ட 13 கட்சிகள் சார்பில் 22 உறுப்பினர்கள் உரையாற்றினர். உறுப்பினர்களின் விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதனன்று(ஜூன் 24) அன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை துவங்கினார். சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார். அதன் தொகுப்பு வருமாறு:-
சமூகநீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி!
“தமிழ்நாடு முதலமைச்சர்”என்ற இந்த அரிய ஆசனத்தைப் பார்க்கும் போதும், அதில்அமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளை நினைக்கும்போது மெய் சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன.திமுகவுக்கு முன்னோடியாக நீதிக் கட்சி 1920 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள் ளது. முதன்முதலாக சமூக நீதிக்கான உத்தரவுகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்தது.மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து, பிரதிநிதித்துவம் தந்து, கல்வியில் சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாய மாற்றங்களுக் கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூகநீதி - சமத்துவ சமுதாயம் காணும் அடித் தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய திமுக ஆட்சி. 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன் முதலாக திமுக அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி” என்று அண்ணா சொன்னார்கள். அதேவழியில், அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர்! கலைஞரின் தொடர்ச்சி நான்! ஏன், இந்த அரசு! நமது அரசு.
இது வெறும் “ட்ரெய்லர்”தான்!
ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் - கொள்கைகள் - கோரிக்கைகள் ஆகிய அனைத் தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது, அரசாங் கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம்தான்.அரசின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். அதாவது, இது ஒரு “ட்ரெய்லர்”. “முழு நீளத்திரைப்படத்தை விரைவில் வெள்ளித் திரையில் காண்க” என்று முன்பெல் லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக் களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் - அவற்றைச் சந்திப்பதற் கான சாதுரியங்கள் என அனைத்தும் விரைவில் நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும்.
இல்லை என்பதே இல்லை!
“தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை”என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள்தான் முடிந்துள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து நாங்கள் மக்களுக்கு கொடுத்திருக் கக்கூடிய வாக்குறுதிகளில் ஒவ் வொன்றாக நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.
அடக்க முடியாத யானை!
கொரோனா தொற்றை கட்டுப் படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய எதிர்க் கட்சித் தலைவர் “மணியோசை வரும் முன்னே யானைவரும் பின்னே”என்று கூறியுள்ளார். ஆளுநர் உரை மணியோசையும் அல்ல யானையும் அல்ல. அதுமட்டுமல்ல, அடக்கப் பட்ட யானைக்குதான் மணி கட்டுவார் கள். யானைக்கு நான்கு கால்கள்தான் பலம். அதேபோல, திமுவுக்கு சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய நான்கு கொள்கையும்தான் பலம்.
அரசியல் பிரச்சனை அல்ல!
கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் இரண்டாவது அலையின் தொற்று குறைந்தது. இது அரசியல் பிரச்சினை அல்ல; கட்சிப் பிரச்சினையும் அல்ல; ஆட்சியின் பிரச்சினையும் அல்ல; மக்கள் பிரச்சினை. மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்சினை. அனைவரும் சேர்ந்து செயல்பட்டு கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
******************
ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம்
சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் போது முன்வைத்த கோரிக்கைகள், தொகுதி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களால் குறித்து வைக்கப் பட்டுள்ளன. துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்து நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். “பொறுத்தார் பூமி ஆள்வார்”என்பது பழமொழி. நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம்; இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் உங்களுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம்.
******************
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தை “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்பதை போல் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறந்தே விட்டார். அதன்விளைவுதான் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணமானது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தனது கடமையும் பொறுப்பும் முடிந்ததைப் போல பேசுவதும் தவறு. வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியதை கட்டுப்படுத்த தவறியதற்கு அவரும் அதிமுக ஆட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும்.