சென்னை:
பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் தம்மீது அவதூறு பரப்பும் நபர்களை கைது செய்யக் கோரி தமுஎகச மாநில துணைச் செயலாளர் பேரா.சுந்தரவள்ளி வியாழனன்று (செப்19) சென்னை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
பொதுவெளியில் கடந்த 18ஆண்டுகளாக பெண் சமத்துவத்திற் காகவும் சிறுபான்மை மற்றும்ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக வும் பேரா. சுந்தரவள்ளி செயல் பட்டு வருகிறார். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து முகநூலிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இந்நிலையில் மதவெறி இயக்கங்களாலும் இனவெறிக் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட சிலர் பேரா.சுந்தரவள்ளி மீது அவதூறு கருத்துக்களையும், பொய்களையும் சமூக ஊடகங்களில் (முகநூல், வாட்ஸ்ஆப்) பதிவிட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் தரக்குறைவான வார்த்தைகள், மீம்ஸ்கள், மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள், வசவுகளையும் பதிவிடுகின்றனர்.கடந்த செப்.17 அன்று அபிமன்யூ, சரவணதுரைசாமி, ஆனந்தமுருகன் ஆகியோர் தங்களது முகநூல் பக்கத்தில் பேரா.சுந்தரவள்ளி யை விபச்சார வழக்கில் கைது செய்ததாக புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பியது போன்று போஸ்டர் தயாரித்து அதை பதிவிட்டுள்ளனர். பிற சமூக ஊடகங்களிலும் பரப்பியுள்ளனர். இதேபோன்று ஏற்கனவே சதீஸ்குமார், ஜெயபரிச்சந்து, தமிழ்ஹிந்து, வசந்துவசந்து, மணி, குரங்கு சூழ்ச்சி உள்ளிட்ட பெயர்களில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இது தனது பொது வாழ்க்கைக்குஇழிவை ஏற்படுத்தக் கூடிய செயலாக உள்ளது; எனவே பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுந்தரவள்ளி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து பேரா.சுந்தரவள்ளி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-முகநூலில் என் மீது பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். தற்போது இதில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ‘தம்பிகளும்’ இணைந்து செயல்படுவதாக தெரிகிறது. இது குறித்து நாம் தமிழர் கட்சிஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முகநூலில் தகவல் அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மேலும் புதியதலைமுறை தொலைக்காட்சி டெம்பிளேட்டை பயன்படுத்தியது குறித்து அந்த நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக இயங்கிவரும் எனது பணியை இந்த தரக்குறைவான முகநூல் பதிவின் மூலம் ஒருபோதும் முடக்கி விட முடியாது.இடதுசாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமுஎகசவினர் துணையோடு நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன். என்னைப் போன்ற போராளிகளை இழிவுபடுத்தும் நோக்கோடு ஆபாசமாக பதிவிட்டவர்கள் மீது சென்னை காவல்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மனிதி, விசிக, வெல்ஃபேர் கட்சி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, சுயஆட்சி இயக்கம், தென்னிந்திய திரைத்துறை பெண்கள் அமைப்பு, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பொதுவுடைமை இயக்கம், லா எக்ஸ்போசர் ஆடினன்ஸ், சட்டவிழிப்புணர்வு அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகள் துணையோடு இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பின் போது பி.சுகந்தி, என்.அமிர்தம் (மாதர்சங்கம்), செல்வி(மனிதி), கு.க.பாவலன் (விசிக) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.