சென்னை:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதலமைச்சரை சந்தித்து முறையீடு செய்வதற்காக வெள்ளிக்கிழமையன்று சென்னை சேப்பாக்கத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் மீது தமிழகஅதிமுக அரசின் காவல்துறை மூர்க்கத்தனமாகத் தடியடி தாக்குதல் நடத்தியது.இதில் பெண் ஊழியர் ஒருவருக்கு கால்முறிந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரவும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்ய பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமையன்று சேப்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றுதிரண்டனர்.இந்த போராட்டத்திற்கு சங்கத்தின்மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமைவகித்தார். பொதுச் செயலாளர் ஆ.செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசியதும் அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் கு.வெங்கடேசன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.பி.முருகையன், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.பாரி, வணிகவரிப் பணியாளர் சங்க மாநிலத் துணைத்தலைவர் சி.கலைச்செல்வி, தொழில் நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ம.அந்தோணிசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றினர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்த போராட்டத்தின் இறுதியாக தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்பொழுது காவல் உதவி ஆணையர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து அரசு ஊழியர்களை ஒரு அடி கூட நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்தில் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் அரசு ஊழியர்கள் மீது கண்மூடித்தன மாக தாக்குதல் நடத்தினர்.
காவல்துறையினரின் அராஜக தாக்குதலில் திருப்பூர் கால்நடை பராமரிப்புத் துறை சங்க நிர்வாகி ராணி, ஈரோடு தொழில்நுட்ப பயிற்சி அலுவலர் சங்க மாநிலச்செயலாளர் சீனிவாசன் ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களை காவல்துறை விரட்டி, விரட்டி அடித்தும் கூட்டத்தை கலைத்தும்நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்து 3 இடங்களில் சிறைவைத்தனர்.இதுகுறித்த தகவலை அறிந்த சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை சந்தித்தார்.
கண்டனம்
போராடிய அரசு ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி தாக்குதல் நடத்தியுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர்கள் நெ.இல.சீதரன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசு ஊழியர்கள் போராட்டத்தை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், தேவையின்றி கவுரவப் பிரச்சனையாக கருதக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.