சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை நீதிபதிகள் வீடுகளிலிருந்து பணியாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சிக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ஜூன் 19 முதல் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு சார்பில் கூடி விவாதிக்கப்பட்டது.
இக்குழு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்றலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நான்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட முதன்மை நீதிபதிகள் குறைப்பது குறித்து முடிவுசெய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்கள் தற்போதைய நடைமுறையுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.