சென்னை:
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றி சென்றுள்ளனர். வெள்ளியன்று காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் தண்ணீர் ஊற்றி பெயிண்டை அகற்றி சிலையை சுத்தம் செய்தனர்.இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதையடுத்து பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சுந்தராபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவத்திற்கு அமைச் சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப் பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
இரா.முத்தரசன்
பெரியார் முன்னெடுத்த கொள்கை வழி பயணத்தை இதுபோன்ற செய்கைகளால் ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது; என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:“கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிகவன்மையாகக் கண்டிக்கிறது.கோவை - பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது சில சமூக விரோதிகள் இன்று அதிகாலை காவி சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். பெரியார் சிலையை அவமதிப்பதன் மூலம் அவர் முன்னெடுத்த கொள்கை வழி பயணத்தை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.
கொடிய கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். இந்த நோய் பெருந் தொற்றை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வருவதில் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.கடந்த நான்கு மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலேயே சிலை அவமதிப்பு செயல் நடந்துள்ளது.பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது எதேச்சையானது அல்ல. மதவெறி, சாதி வெறிக் கும்பல்கள் மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள் திட்டமிட்டு மேற்கொள்கிற தாக்குதலாகும்.
பெரியார் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, உலக அளவிலான சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி தலைவர் ஆவார். பகுத்தறிவு சமுதாயம் அவரது சிந்தனைகளை, செயல் அனுபவங்களை கைவிளக்காக பயன் படுத்தி இயங்கி வருகின்றன என்பதனை அறிவு சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற் கான முறையில் சுந்தராபுரம் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத் தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக் கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.