தோழர் பி.சி.வி. என்று அழைக்கப்படும் தோழர் பி.சி. வேலாயுதம், மின்சார வாரியத்தில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ஓயாது உழைத்தவர். தானே ஒரு தினக்கூலியாக இருந்தாலும், தினக்கூலிகளை நிரந்தரம் செய்வதில் முன்னின்று போராடி வெற்றி கண்டவர். 1969-இல் நெல்லை தினக்கூலிகளின் கூலி உயர்விற்காகவும், ஆணும் பெண்ணும் சமமான ஊதியம் பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடினார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கோரிக்கையை வெற்றிபெறச் செய்தவர்.
14.11.1970 அன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உருவானபோது, மாநில உதவி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேற்பார்வை பொறியாளரை வழிமறித்ததாக கூறி கைதான 53 தோழர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, அவர்களில் முதன்மையானவர் தோழர் பி.சி. வேலாயுதம்.
02.01.1984 அன்று நெல்லையில் தொழிற்சங்க அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டபோது, சி.ஐ.டி.யு. அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க போராடி வெற்றிபெற்றார். அப்போது சங்கத்தின் திட்டத் தலைவராக இருந்தார். நியாயமான கோரிக்கைகளை முன்நிறுத்தி, நெல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மேற்பார்வை பொறியாளர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தபோது, "எனது தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காமல் பந்தலை விட்டு வெளியே வர மாட்டேன், வேண்டுமானால் பந்தலுக்கே வந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என உறுதியாகக் கூறினார். இறுதியில் மேற்பார்வை பொறியாளர் பந்தலுக்கே வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை உருவானது. ஒரு உயரதிகாரியை போராட்ட பந்தலுக்கு வரவழைத்த போராளி தோழர் பி.சி. வேலாயுதம்தான்.
தொழிலாளர் வர்க்க அரசியலில் ஏற்பட்ட சீர்திருத்தவாத கருத்துக்களை எதிர்த்து உறுதியாகப் போராடினார். மத்திய அமைப்பு அவசரகாலக் கொடுமையை துணிவுடன் எதிர்த்ததால், தோழர் து. ஜானகிராமனும் தோழர் பி.சி. வேலாயுதமும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1986இல் டெல்லியில் நடைபெற்ற பேரணிக்குத் தடைவிதிக்கப்பட்டபோதும், அந்த தடையை மீறி தோழர்கள் இ.பாலானந்தம், து.ஜானகிராமன் மற்றும் பி.சி.வேலாயுதம் கைது செய்யப்பட்டு தில்லி காவல் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டனர்.
தோழர் பி.சி. வேலாயுதம் பணிஓய்வு பெறும்போது, பணப்பலப் பயன்கள் மிகக் குறைவாக இருந்தன. ஏனெனில் மின் ஊழியர் மத்திய அமைப்பை மாநிலம் முழுவதும் கட்டுவதற்காகவும், தொடர்ந்து இயக்க போராட்டங்களில் ஈடுபட்டதாலும், சம்பள இழப்புடன் விடுப்பில் சென்று அமைப்பை வலுப்படுத்தியதாலும், அவர் ஒருமாதத்தில் முழு சம்பளம் பெற்றதே இல்லை. பெரும்பாலும் 20 அல்லது 25 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அமைப்புப் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவருடைய ஓய்வூதியப் பயன்கள் குறைவாக இருந்தன. இதை மனத்தில் வைத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் தோழர் பி.சி. வேலாயுதத்திற்கு தெரியாமல் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் வசூல் செய்து, ரூ.45,000ஐ ஓய்வுவிழாவில் வழங்கினார்கள். இந்த தொகையை பெற்ற பின், “இந்த தொகையை நான் எப்படியும் செலவழிக்கலாம் இல்லையா? ஆனால் இதன் பாதியை நமது கட்சிக்கும், மீதியனை முழுதாக நமது சங்கத்திற்கும் வழங்குகிறேன். மறுப்பு இல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்தார்.
தோழர் பி.சி. வேலாயுதத்திற்கு நான்கு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் — மொத்தம் 6 குழந்தைகள். இரண்டாவது மகளின் திருமணத்திற்கு நேரில் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் அவர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். தன் சொந்த மகளின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் தொழிற்சங்கத்திற்காக போராடி சிறைக்கு சென்ற மகத்தான தலைவர் என்பதையே இது உணர்த்துகிறது.
மின்துறை நிர்வாகத்தில் நடைபெறும் லஞ்சம், ஊழலை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவதிலும், தொழிலாளர்கள் தூய்மையாக வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்திலும் முன்னிலை வகித்தவர். அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். தமிழக மின்வாரியத்தில், மின் ஊழியர்களின் உரிமைக்காக உழைத்த தோழர் பி.சி. வேலாயுதம் அவர்கள், 1990 மே 5 ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார்.
தோழர் பி.சி. வேலாயுதத்தின் நினைவு நாளான இன்று வீரவணக்கம் செய்கிறோம். ஒப்பந்த மற்றும் பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
தொகுப்பு: டி. பழனிச்சாமி