குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஸ்டெச்சர் இல்லாமல் நோயாளிகள் அவதி
வேலூர், ஜூலை 16 - வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு, கண் பல், காது மூக்கு தொண்டை, தீப்புண் மற்றும் விஷமுறிவு ஆகிய மருத்துவ பிரிவு களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வதோடு, உள் நோயாளியாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தவிர தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் விபத்து சிகிச்சை பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. விபத்து மற்றும் உடனடி தீவிர சிகிச்சை பிரிவில் சில ஆபத்தான நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம் அதுபோல செவ்வாயன்று இரவு குடியாத்தம் சித்தூர் சாலையில் செல்வ பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் சிக்கிய ஒரு வாலிபரை குடியாத்தம் அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அந்த நபருக்கு முதலுதவி செய்த நிலையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த காரணத்தால் மேல் சிகிச்சை அளிக்க வேண்டிய காரணத்தால் குடி யாத்தம் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் அவரை வேலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் வேலூர் மருத்துவ மனைக்கு நோயாளியை அழைத்து செல்ல உயிர் காக்கும் 108 வாகனத்திற்காக நீண்ட நேரம் காத்தி ருந்த பின்னர் காயமடைந்த நோயாளி வலியால் துடித்ததால் அவரை சுமார் 300 மீட்டர் தூரம் நோயாளியின் உறவினர்கள் இருவர் கைகால்களை பிடித்து தூக்கி வந்து 108 ஆம்பூலன்சில் ஏற்றினர். இதனைப் பார்த்த அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் தரம் உயர்த்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு ஸ்டெச்சர் கூட இல்லையா? என வேதனையில் புலம்பி னர். மருத்துவமனை நிர்வாகம் அவசர சிகிச்சை பகுதியில் உடனடியாக ஸ்டெச்சர் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.