tamilnadu

img

ரூ. 200 கோடி அரசு நில மெகா மோசடியில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக... அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

சென்னை:
அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து நடைபெற்றுள்ள ரூ. 200 கோடி மெகா மோசடி குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்திய போது போலி ஆவணங்கள் மூலம் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா பெற்று அதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விற்று சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா மோசடியில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆஷிஷ் மேத்தா, காஞ்சிபுரம் சிவன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மெகா மோசடி அரசு உயர் அதிகாரிகள் துணையோடு  நடைபெற்றுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இதில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் பெரும் புள்ளிகளும் தொடர்பில் இருக்கலாம் என்றும், போலி ஆவணங்கள் தயாரித்து மேலும் பலர் இதுபோன்று இழப்பீடுகள் பெற்றிருக்கலாம் என்றும் வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான உரிய இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அரசியல், அதிகாரம் படைத்தவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா செய்து அதனை அரசுக்கே ஒப்படைத்து கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டம் பீமன்தாங்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா குறித்தும், இந்த மெகா மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி சட்டப்படியாக தண்டிப்பதற்கும், இதுபோல் தமிழகத்தில் வேறு பகுதிகளிலும் மோசடி நடந்துள்ளதா என்று விசாரிப்பதற்கும் உடனடியாக தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து விசாரித்து உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.