சென்னை, ஜூன் 1-தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தராகப் பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர் பார்த்தசாரதி நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தராகப் பார்த்தசாரதியை நியமனம் செய்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்பேரில் அவர் 3 ஆண்டுகள் துணைவேந்தராகப் பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத் தலைவர், இயக்குநர் என 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி அனுபவம் கொண்ட இவர், அப்பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் உருவாக வழியமைத்துள்ளார். 117 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், பல்வேறு கல்வித்திட்டங்கள் உருவாகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.