100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டொன்றிற்கு 100 நாள்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இவ்வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.281/- எனவும் இம்முழு ஊதியத்தினை பெற 37 கன அடி வேலை செய்ய வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரவர் செய்யும் வேலையின் அளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது
இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கென அரசாணை (நிலை) எண். 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி.1) துறை
நாள்.25.06.2012 ல் சிறப்பு ஊரக விலைப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், முன் அளவீடு செய்ய உதவுதல் மற்றும் சிறு வேலைகளான பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) கரைகளை சமன்படுத்துதல், கரைகளின் சரிவுப்பகுதிகளை சீர்செய்தல் போன்ற பணிகள் மட்டுமே செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.