வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், புதுதில்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏற்பட்ட கனமழை, மேகவெடிப்பு காரணமாக அதிகமான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் கனமழையோ, மேகவெடிப்போ ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை விரைவில் முடித்தல், ஏரி-குளங்களை தூர்வாருதல், மழை நீர் தேங்கும் போது உடனுக்குடன் நீரை வெளியேற்றுவதற்கான மின் மோட்டார் உள்ளிட்ட ஏற்பாடுகள், ஆகாய தாமரை அகற்றுதல், வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகள், படகுகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.