சென்னை:
நெல்லையில் ரூ. 15 கோடியில் ‘பொருநை’ அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிக்கை அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வு மூலம் சங்ககால தமிழர்களின் வரலாற்றைஉலகமே அறிந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இந்த அகழாய்வை பாதியிலே கைவிட்டதை சுட்டிக்காட்டினார்.பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாரா ய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரியபொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.