tamilnadu

img

திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும்: கே.பாலகிருஷ்ணன்...

சென்னை:
திமுகவின் தொகுதி பேச்சுவார்த்தை குழுவுடன் செவ்வாயன்று (மார்ச் 2) அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

16-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது.இதன்பிறகு சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்  கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள்போட்டியிட விரும்பும் எண்ணிக்கையை தெரிவித்தோம். கடந்த தேர்தல்களில் போட்டியிட்டதை விட கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். அதில்திருப்திகரமான உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்
“பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மார்ச் 4-6 தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். 6 ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணிதான் வெற்றிபெறும்” என்றும் அவர் கூறினார்.“பாஜக ஏதாவது சாதனை செய்திருந்தால்தானே அதை கூறி வாக்கு கேட்க முடியும்? அவர்கள் ஆட்சியில் வேதனையும் சோதனையும்தானே உள்ளது.எனவே, எதிர்க்கட்சிகளை குறை கூறுகிறார்கள். அண்மையில் நடந்த எந்ததேர்தலிலும் பாஜக வெற்றி பெறவில்லை. பீகாரில் தில்லுமுல்லு செய்துவெற்றி பெற்றது. ஆகவே, தோல்வியை மறைக்க இட்டுக்கட்டி பாஜக பேசுகிறது. பாஜகவும் அதனோடு சேர்ந்த கட்சிகளும் படுதோல்வி அடையும்.ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் தில்லுமுல்லு செய்ய திட்ட மிட்டுள்ளார்கள். பிற மாநிலங்களை போன்று தமிழகத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.