சென்னை:
ஆன்லைன் வகுப்பினை தரப்படுத்தி சமவாய்ப்பை ஏற்படுத்திய பின்னர் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மூன்று மகள் கள், ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் அதன் பயன்பாட்டுக்காக தமது தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளனர். மூன்று செல்போன்கள் வாங்கித்தரும் வசதி அவருக்கு இல்லாததால், மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் வந்தால் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஆறுமுகத்தின் மூத்த மகள்நித்தியஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருப்பதைச் சாதாரண மரணங்களில் ஒன்றாகக் கடந்து செல்ல முடியாது.
அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள் என்பதை நித்தியஸ்ரீயின் மரணம் எடுத்துக்காட்டுகிறது. அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்வதற்கு முன்னால், அனைவருக்கும் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந்தித்ததாகத் தெரியவில்லை.இதைப்போல் இன்னும் எத்தனை நித்தியஸ்ரீகள் புலம்பிக் கொண்டு இருக்கிறார் களோ தெரியவில்லை. இதற்கிடையில் ஆலங்குடியை அடுத்த கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, தனக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் வெளியாகியுள்ளது. அதனால்தான் நீட் தேர்வை பலிபீடம் என்கிறோம்.எனவே, ஆன்லைன் வகுப்புகளை பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள் வதாக தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் நடத்த வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.