வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே!
பல்லவி ஆண்கள் செய்யும் வேலை இது பெண்கள் செய்யும் வேலை இது என்றொதுக்கி வைப்பது சரியேயில்லை! இருமனங்கள் இணைந்துவிட்டால் ஒருமனமாய் இருந்துவிட்டால் எந்த வேலையும் இங்கு சுமையேயில்லை! சரணம் -1 வீட்டைப் பெருக்கி கோலம் போடும் அந்த வேலைகளை ஆண் செய்தாலென்ன? சோறு சமைக்கும் சேலை ஓரம் அந்த வேட்டியும் சேர்ந்து நின்றாலென்ன? உனது படுக்கை தூசுகளை நீயே அகற்றிக் கொண்டாலென்ன? உனது ஆடைகளை நீயே துவைத்து உடுத்திக்கொண்டு சென்றாலென்ன? நீ உண்ணும் பாத்திரத்தை நீயே எடுத்துச் சென்று கழுவி வைப்பதில் தவறும் என்ன? கடமை என்று சொல்லி மேலும் மேலும் பெண்ணை பணிய வைப்பதன் பொருளும் என்ன? சரணம் - 2 மழையிலும் பனியிலும் சுடுகிற வெயிலிலும் உழைப்பதில் ஆணுக்கு நிகரானாள்! அந்தி சாயும் அவள் மட்டும் சாயாமல் வீட்டு வேலைகளில் தனியானாள்! ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே! இல்லை என்றால் சமத்துவம் என்பது கேள்விக் குறியாய்ப் போகும் இங்கே! கண்ணே மணியே முத்தே கிளியே கொஞ்சுவதில் பெண் அழகானாள்! சுயமாய் வாழும் உரிமை பறித்தால் எப்படி பெண் இங்கு சமமாவாள்?