சென்னை:
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை தற்போது உள்ளபடியே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமே தொடரும் என தமிழக கூடுதல் தலைமை செயலாளரும், மாநில வருவாய் நிர்வாக ஆணையருமான பனீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் மாநில அளவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் சென்னை எழிலகத்தில் ஜூலை 26 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாநில சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநர் டாக்டர் என். வெங்கடாச்சலம், மாநில அளவிலான வங்கிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு நிர்வாகி ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் உதவித்தொகை வழங்குவதை தற்போது உள்ளபடி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடர வேண்டும், அனைவருக்கும் ஏடிஎம் வசதி உறுதிப்படுத்த வேண்டும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலம் வழங்குவதற்கு மாற்றம் செய்யக்கூடாது, அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ஏஏஒய் கார்டுகளாக மாற்றி வழங்க கிராம அளவில் முகாம்கள் நடத்த உத்தரவிடவேண்டும்.
வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கீழ் தளத்தில் இருந்து செயல்பட உத்தரவிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் துன்புறுத்தப்படுவது, சுரண்டப்படுவது, தாக்குதலுக்கு உள்ளாவது உள்ளிட்ட புகார்கள் மீது நிர்வாக நீதிபதிகளான வட்டாட்சியர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைளை ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் பிரிவு-7ன்படி செயல்பட உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இக்கூட்டத்தில் வலியுறுத்ததப்பட்டன.
கோரிக்கைகளுக்கு பதில் அளித்துப் பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலம் உதவித்தொகை வழங்க பயனாளிகள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப் படும். தற்போதைய முறையிலேயே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பட்டுவாடா தொடரும். அனைவருக்கும் ஏடிஎம் வசதி செய்துதர வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படும் என உறுதியளித்தார்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர் பி.ஜீவா, துணைத் தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, டிசம்பர்-3 இயக்க தலைவர் பேரா.டி.எம்.என். தீபக், பொதுச்செயலாளர் அண்ணாமலை, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் பி.மனோகரன், மாநில தலைவர் ரவிச்சந்திரன், ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.சிம்மச்சந்திரன், ராகுல் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.