சென்னை:
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதுதவிர சிறப்புப்பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.