tamilnadu

img

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் ஒருவர் சராமாரியாக கத்தியால் குத்தி கொலைவெறியோடு தாக்கியுள்ளார். இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாக கண்டிக்கிறது.

கத்தி குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த  ஊழியர்கள் போதிய அளவில் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு உகந்த முறையில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தர பணியாளர்களைக் கொண்டு உடனடியாக நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.