சென்னை:
நாகை அருகே மாட்டுக்கறி சூப் அருந்தியவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினரின் அராஜக நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாகைக்கு அருகேயுள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் முகமதுபைசான்(24) என்பவர் வியாழக்கிழமை மாலை சாலையோரத்தில் உள்ள கடையில் மாட்டுக்கறி சூப் அருந்தியுள்ளார். இதையறிந்த இந்து மக்கள் கட்சியினர் “மாட்டுக்கறி தின்றால் கொலை செய்வோம்”என்று மிரட்டல் விடுத்துள்ளதோடு, கத்தியால் குத்தி “மாட்டுக் கறிதின்பவனுக்கு இதுதான் தண்டனை” எனக் கூறிக்கொண்டே தாக்கியுள்ளனர். படுகாயமுற்ற முகமது பைசான் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்துமக்கள் கட்சியினரின் இந்த அராஜக கொலைவெறி நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.வட மாநிலங்களில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது சங்பரிவாரத்தினர் மாட்டுக்கறியின் பெயரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வரும் போக்கு தற்போது தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தலைதூக்கியுள்ளதை தமிழக அரசும், காவல்துறையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.மேலும் தமிழகத்தில் இந்துமக்கள் கட்சியினர் மத அடிப்படையிலான வெறுப்பைத் தூண்டிவிட்டு, வன்முறைகளை அரங்கேற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். இதுபோன்ற மதவெறி சக்திகளை தமிழக மக்கள் புறந்தள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
எனவே, தமிழக அரசு இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் மிக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டுமெனவும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சி அமைப்பினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையையும் - அமைதியையும் பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.