ஆம்பூர், மே.16 - அமைச்சர் பங்கேற்ற நிகழ்வு நடந்து கொண்டி ருக்கும் போது, குடிநீர் கேட்டு வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி பகுதிகளிலும் கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் தூய்மைப் பணி யாளர்களுக்கு நிவாரணத் தொகுப்பை வழங்க நகராட்சி அலுவலகத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம. ப. சிவனஅருள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது, 31 வது வார்டு ஜீவா நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இல்லாததால் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது வெளியில் வந்த தொழிலாளர் துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து காரில் இருந்தபடியே மனுவை பெற்றுக் கொண்டு அமைச்சர் சென்றார்.